அதிமுகவை கைப்பற்ற ஆட்சியை கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதைச் செய்ய நாங்கள் தயங்க மாட்டோம், என அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளருமான சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, சிறைக்கு செல்லவேண்டிய சூழ்நிலையில் சசிகலா நினைத்திருந்தால் டி.டி.வி.தினகரனை முதலமைச்சராக்கி இருக்கலாம் என கூறினார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியைத் தான் சசிகலா முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார். அப்படி வாழ்வளித்தவர்களைத் தான் அவர் தற்போது அழிக்கப்பார்க்கிறார் என குற்றம்சாட்டினார்.

துரோகம் செய்தவர்களுக்கு காலம் பதில் சொல்லும் என்றும் சரஸ்வதி கூறினார்.

தொடக்கம் முதலே இந்த ஆட்சி நீடிக்க வேண்டும், கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என செயல்பட்டு வந்த எங்களை ஒதுக்கி வைக்க வேண்டிய காரணம் குறித்து எடப்பாடியும், ஓபிஎஸ்ம் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

சசிகலா மூலம் ஜெயலலிதாவிடம் அறிமுகமாகி, இன்று ஆட்சியில் பல முக்கிய பதவிகளை அனுபவித்து வரும் இருவரும், இன்று நன்றி மறந்து, துரோகம் செய்கிறார்கள் என குற்றம்சாட்டிய சி.ஆர்.சரஸ்வதி, நிச்சயமாக அவர்கள் பதில் சொல்ல வேண்டிவரும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை கைப்பற்ற ஆட்சியை கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதைச் செய்ய நாங்கள் தயங்க மாட்டோம் என்று காட்டமாக தெரிவித்தார்