Asianet News TamilAsianet News Tamil

கிரீமிலேயர் சமூகநீதிக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்காதீர்கள். மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை.

இது குறித்த முடிவை எடுப்பது ஒன்றும் சிக்கலானது அல்ல. கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது பற்றி முடிவெடுக்க வழிகாட்டி விதிகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் வருமான வரம்பை உயர்த்துவது குறித்த முடிவை மிகவும் எளிதாக எடுக்க முடியும். 

Creamy layer is against social justice. Do not deceive backward people. Ramadan request to the Central Government.
Author
Chennai, First Published Jul 22, 2021, 12:46 PM IST

கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு குறித்து  மத்தியஅரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதின் முழு விவரம் பின்வருமாறு:- மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கிரீமிலேயர் ஊதிய வரம்பை உயர்த்துவது குறித்து பரிசீலிப்பதாக கடந்த இரு ஆண்டுகளாக கூறி வரும் மத்திய அரசு, இன்னும் இறுதி முடிவு எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட  ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் போதிலும், அந்த உரிமை அவ்வகுப்பைச் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை. 27% இட ஒதுக்கீட்டு வழக்கில் 16.11.1992 அன்று உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் எனப்படும் வசதி படைத்தவர்களை அடையாளம் கண்டு விலக்கி, அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயம், சம்பளம் தவிர பிற ஆதாரங்களில் இருந்து ஆண்டுக்கு ரூ.8 லட்சம் அல்லது அதற்கும் கூடுதலாக வருமானம் ஈட்டுபவர்கள் கிரீமிலேயர்களாக கருதப்படுகின்றனர். இந்த வருமான வரம்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட்டு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும்.

நடைமுறை எதார்த்தத்திற்கு பொருந்தும் வகையில் இந்த வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், கடந்த 2013&ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கிரீமிலேயர் வருமானவரம்பு 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. அப்போதும் அது போதுமானதல்ல என்றும், கிரீமிலேயர் வருமான வரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியது. கடந்த 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதன்பின் ஒன்றரை ஆண்டுகள் ஆகிய பிறகும் கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு குறித்த கோரிக்கை பரிசீலனையில் தான் இருப்பதாக மத்திய அரசு கூறுவது நியாயமல்ல. 

இது குறித்த முடிவை எடுப்பது ஒன்றும் சிக்கலானது அல்ல. கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது பற்றி முடிவெடுக்க வழிகாட்டி விதிகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் வருமான வரம்பை உயர்த்துவது குறித்த முடிவை மிகவும் எளிதாக எடுக்க முடியும். ஆனாலும், அந்த முடிவை எடுப்பதில் தேவையற்ற கால தாமதம் செய்யப்படுவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பாதிக்கும்.
 இந்த விஷயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததை வைத்துப் பார்க்கும் போது,  கிரீமிலேயரை தீர்மானிப்பதற்கான வருமானத்தில் விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருவாயையும் சேர்ப்பதற்காகத் தான் மத்திய அரசு திட்டமிட்டு தாமதப்படு த்துகிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற தத்துவம் இந்திய அரசியல் நிர்ணய அவையால் படைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திலோ, அதன்பின் அதில் நாடாளுமன்றத்தால் செய்யப்பட்ட திருத்தங்களிலோ இடம் பெறவில்லை. மாறாக, சமூகநீதிக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் சில நீதிபதிகளால் திணிக்கப்பட்டது தான் இந்தத் தத்துவம் ஆகும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான இந்தத் தத்துவம் இன்னும் நீடிக்கிறது. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் தகுதியுடைய பலர் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிரீமிலேயர் நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. 

அதற்கு முன்பாக கிரீமிலேயர் வருமான வரம்பு உடனே  உயர்த்தப்படாவிட்டால் இப்போது இட ஒதுக்கீட்டை அனுபவிக்கும் பலரும் அந்த உரிமையை இழப்பார்கள். மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த சில வாரங்களில் தொடங்கவுள்ளது. அதற்குள்ளாக கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்படவில்லை என்றால் தகுதியுள்ள பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியாத நிலை ஏற்படும். அதைத் தவிர்க்கும் வகையில்  கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி, கிரீமிலேயர் வருமான வரம்பை கணக்கிடுவதில் விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருவாய் சேர்த்துக் கொள்ளப்படாது என்றும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios