சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி (34) டெல்லியில் ஆங்கில நாளிதழில் பணியாற்றி வந்தார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தீவிர சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்தார். தன்னுடைய மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி இறந்தது பற்றி சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்னுடைய மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரியை இந்த காலைப் பொழுதில் இழந்துவிட்டேன் என்பது மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு நம்பிக்கையூட்டி சிகிச்சை அளித்து எங்களுடன் நின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், எண்ணற்ற மற்றவர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.