சென்னை தி.நகரில் செவாலியே சிவாஜி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை ‘விபச்சார விடுதி’ என்று சமூக ஊடங்களில் பதிவிட்டது சர்ச்சையானது. இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம்  தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை சமர்பித்தார். 
அதில், ‘சமீப காலமாக அரசியல் கட்சி தலைவர்களையும் கட்சிகளையும் இழிவுப்படுத்தி அவதூறு செய்யும் பதிவுகள் மலிந்து வருகின்றன. இதன்மூலம் வெறுப்பு அரசியலை முன்னெடுத்து பகைமை உணர்வுகளை வளர்தெடுத்து சமூக மோதல்களையும் வன்முறைகளையும் உருவாக்கும் திட்டமிட்ட சதி செயல்களை நிறைவேற்றி கொள்ள ஒரு கும்பல் செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இரா.நல்லக்கண்ணு படத்தை ஆபாசமாக சித்தரித்து அசிங்கப்படுத்தும் வார்த்தைகள் அடங்கிய முகநூல் பதிவு சமூக வலைதளத்தில் பரப்பபடுகிறது. மக்களிடம் நன்மதிப்பை பெற்ற தலைவர் அவர். தூய்மையான எளிமையான வாழ்க்கையைக் களங்கப்படுத்தும் வகையிலும் மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும் தீய எண்ணத்தோடு பரப்பப்படுகிறது.


மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தின் புகைப்படத்தையும் பெண் செயல்பாட்டாளர் ஒருவரின் படத்தையும் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.இது தொடர்பாக ஏற்கனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு புகார்கள் குறித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று செயல்படும் நபர்களை கைது செய்ய வேண்டும்" என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.