திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஓராண்டுக்கு மேல் மிசா சித்திரவதையை அனுபவித்ததை நாடு அறியும் என்று திமுக கூட்டணியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது,.
அண்மையில் திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு,  “எதிர் முகாமில் உள்ளவர்கள் மு.க. ஸ்டாலினை தாக்கிப் பேசும்போது, தங்கள் கூட்டணி கட்சி ஸ்டாலினுக்காக் குரல் கொடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் வந்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள் போல” என்று பேசியது கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மிசாவில் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
 இந்நிலையில் மிசா வழக்கில் ஸ்டாலின் கைது பற்றி அமைச்சர் பாண்டியராஜன் பேசியது பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. அக்கட்சியின்  தமிழ் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஓராண்டுக்கு மேல் மிசா சித்திரவதையை அனுபவித்தார். இதை நாடே அறியும். அடிக்கடி கட்சி மாறிக்கொண்டே இருக்கும் அமைச்சர் பாண்டியராஜன் பிற அரசியல் கட்சிகளின் கொள்கைகளை கொச்சைப்படுத்துவதைத் திருத்திக்கொள்ள வேண்டும்.


நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. எனவே திமுகவைப் பலவீனப்படுத்திவிட்டால் இந்தக் கூட்டணியை கலகலக்க செய்து விடலாம் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு இதுபோன்ற பிரச்னைகளை கையில் எடுக்கிறார்கள். இந்த முயற்சிகள் எல்லாம் நிச்சயம் படுதோல்வி அடையும்.” என்று இரா. முத்தரசன் தெரிவித்தார்.