ஆந்திராவில் அடுத்த 90 நாட்களுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கொரோனா உருவான சீனாவை விட அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பு மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் அதனை கட்டுப்படுத்த அம்மாநில முதல்வர் பல்வேறு வகையில் சிறப்பான நடவடிக்கையை எடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் பல வகையான தொழிலாளர்களுக்கும் நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுவரை ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,372ஆக உள்ளது. இதில்,  4,435 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், தடப்பள்ளியிலுள்ள முகாம் அலுவலகத்தில் தொற்றுநோய் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது நாள்தோறும் 24,000 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளவர்கள் மற்றும் அதிக ஆபத்து பிரிவில் உள்ளவர்கள் மீது தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், நிறுவனங்கள், மால்கள், கோயில்கள் மற்றும் சந்தைகளிலும் மக்களுக்கு  பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

இதையடுத்து பரிசோதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகளை வழங்குவதுடன், பரிசோதனை முடிவுகளின் விவரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட க்யூஆர் சுகாதார அட்டைகளில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தினார். மேலும் சோதனை செய்ய வேண்டிய நபர்களை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப வேண்டும், என்றும் அவர் தெரிவித்தார்.  

ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு 104 அவசர ஊர்தி வாகனம் ஒதுக்கப்பட்டு கிராமம் தோறும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். மேலும், 90 நாட்களுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொற்று ஏற்பட்டவர்களை களங்கப்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டார்.