court need to judge the tamilnadus future

நீதிமன்றங்களின் கைகளில் தமிழகத்தின் எதிர்காலம்: மீளுமா? மீட்கப்படுமா?

மாமியார் வீட்டுக்குப் போவது நானல்ல, எடப்பாடி பழனிச்சாமிதான் என்று சனிக்கிழமை இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியுள்ளார். யார் வீட்டுக்குப் போவது, மாமியார் வீட்டுக்குப் போவது என்றெல்லாம், வாய்த்தகராறும் வாய்க்கால் தகராறும் ஊடகங்களின் வாயிலாக இன்று பொதுமக்களின் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும்போது, இன்னும் சில தரப்புகள் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே நீதிபதிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, வாய்தாக்களுக்கும் கெடுக்களுக்கும் உட்படுத்தியிருக்கிறது.

இந்த வீட்டுக்குப் போகும் பொன்மொழிச் சண்டையைத் துவக்கி வைத்தவர் டிடிவி தினகரன். இரு தினங்களுக்கு முன்னர், தன்னுடைய ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏ.,க்களை கர்நாடக மாநிலம் குடகுப் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயல்வதும், திருச்சியில் தனது பொதுக்கூட்டத்துக்கு போலீஸார் மூலம் அனுமதி மறுக்கப்படுவதற்கும், ஜெயா டிவி., யை அரசு கேபிளில் கட்டாக்கியதற்கும் என பல்வேறு நெருக்குதல்களால் தினகரன் நிலைகுலைந்து தான் போயுள்ளார். ஆளும் தரப்புக்கும் எதிர்த்தரப்புக்குமாக நடக்கும் அனைத்து அரசியல் சித்து விளையாட்டுகளும் இப்போது, ஆளும் தரப்பில் இருந்து பிரிந்து சென்ற அதிகார மையத்துக்கும் ஆளும் தரப்புக்கும் இடையிலேயே நடக்கும் விநோதத்தை தமிழகம் பார்த்து வருகிறது. 

இதனால்தான், "ஒரு வாரத்திற்குள் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்குப் போவார்!" என்று சொன்னார் டிடிவி தினகரன். பதிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பேசியபோது, நாங்கள் வீட்டில் இருந்து வந்தால், வீட்டுக்குத்தான் திரும்புவோம். வீட்டுக்குப் போவது அப்படி என்ன அதிசயமான செயலா? ஆனால், டிடிவி தினகரன், வீட்டுக்கு அல்ல, மாமியார் வீட்டுக்குத்தான் போவார்!" என்றார்.

இத்தனைக்கும் இத்தகைய அரசியல் ரீதியான நவ நாகரீகப் பேச்சுக்கள் எல்லாம், திராவிட அரசியல்வாதிகளால் நாகரீகப் பேச்சுக்குச் சொந்தக்காரர் என்று கொண்டாடப் படும் முன்னாள் முதல்வர் அண்ணாத்துரையில் பிறந்த நாளில்தான் கொடிகட்டிப் பறந்திருக்கிறது என்பதை கவனித்துப் பார்க்க வேண்டியுள்ளது. 

ஆனால், இன்றைய அரசியலைக் கூர்ந்து கவனித்து வருபவர்கள், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வார்கள். அது, இன்றைய அதிமுக., அரசியல் மட்டுமல்ல, அரசாட்சியும் கூட, நீதிமன்றங்களின் கைகளிலேயே சிக்கிக் கிடக்கின்றது என்பதே யதார்த்தம் என்பதை உணர்வார்கள். 

எந்த விஷயத்துக்கும் நீதிமன்றத்தை நாடுவது, ஆளும் தரப்பு, அதனை எதிர்க்கும் தரப்பு, எதிர்க்கட்சிகள் தரப்பு என அனைவரின் அணுகுமுறையாகவே மாறிப் போய்விட்டது. சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று ஒரு தரப்பு சொல்லிக் கொண்டிருந்தபோது, நீதிமன்றத்துக்கு ஒரு தரப்பு போனதன் விளைவு- செப். 20 வரை சட்டமன்றத்தைக் கூட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ஆளும் தரப்பு, தனது பலம் எனக் கருதுவதும், கட்சியின் மையத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான அடையாளமான கட்சியின் சின்னம் இரட்டை இலையை தாங்கள் மீட்டெடுப்பதுதான். ஆனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இரட்டை இலை யாருக்கு என்பதை முடிவு செய்ய அக்டோபர் 31 வரை கெடு விதித்துள்ளது.

இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டிய கெடு இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குள் தங்களின் சின்னம் மீட்டெடுக்கப்படுமா என்பதில் சந்தேகம். அதற்காக மீண்டும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அலைந்து திரியும் ஆளும் தரப்பு. 
நீதிமன்றங்களோ உடனடி தீர்வுக்கு வழி சொல்வதில்லை. வாய்தா... கெடு... கெடுவுக்கு மேல் கெடு. இந்தக் கெடுக்களால், கேடு காலம் வாய்ந்துவிட்டதென்னவோ, ஓட்டுப் போட்டுவிட்டுக் காத்திருக்கும் தமிழக மக்களுக்குத்தான்!

எத்தனை எத்தனை சிக்கல்கள்? எத்தனை பிரச்னைகள்... தீர்வுக்கு வழியின்றித் தவித்து வருகிறார்கள் தமிழக மக்கள். அவர்களின் யதார்த்தமான பிரச்னைகளைக் கண்டு கொள்வார் இல்லை. நீட்டும், ஜல்லிக்கட்டும், எரிவாயு வயல் பிரச்னைகளும் ஊடகங்களிலும் ஊகங்களிலுமாய் முன்னெடுத்துச் சென்றிருக்க, மக்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டிய எதிர்க்கட்சிகளோ, ஆட்சிக் கட்டிலைப் பிடிக்க ஆவேசத்தோடு பிண அரசியலை முன் வைத்துக் கொண்டிருக்கின்றன. 

கிராமங்களில் முதியோர் பென்ஷன் வந்து ஆறேழு மாதங்கள் ஆகி விட்டன என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். நூறு நாள் வேலைத் திட்டத்தில், கூலி கடைசியாக எப்போது கொடுக்கப்பட்டது என்பது பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருக்கிறது. விவசாயம் படுத்துப் போனதால், கிராமப்புற வேலையின்மையும், வறுமையும் மக்களை வட்டி வதைக்கிறது. 

இத்தனை அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் டெங்குவும், சுகாதாரச் சீர்கேடால் விஷக் காய்ச்சலும் பரவி மக்களைக் கொன்றுபோட்டு வருகிறது. பல இடங்களில், கொசு மருந்து அடிக்கக்கூட நாதியற்றுப் போய் நிற்கிறது தமிழகம்.

ஆனால், அரசாட்சி நடத்த வேண்டிய அரசோ, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே போராடிக் கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் முட்டுக் கட்டைகள். எல்லா வகைகளிலும் தாக்குதல்கள். முடங்கிப் போயுள்ள நிர்வாகம். அரசியல் ரீதியாக ஒருவர் சொல்வதை இன்னோர் இடத்தில் என்று அவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்து மக்களை உழல வைத்துக் கொண்டிருக்கும் ஊடகங்கள். இப்படி எல்லாம் இருந்தால், பாவம்... மக்கள் என்னதான் செய்வார்கள்?

பணம் வாங்கி ஓட்டுப் போட்ட பாவிகளால்தான் இந்த நிலை என்று இப்போது வருத்தப்படுகிறார்கள் பலர். மனிதர்கள் சரியாக இருந்தால்தான் மண்ணும் சரியாக அமைந்து நல்ல பலனைத் தரும். வாக்காளர்கள் சரியாக இருந்தால்தானே மக்கள் பிரதிநிதிகளும் ஒழுங்காகப் பணியாற்றுவார்கள். இங்கோ, நான் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்தவன்தான் என்று கூச்சமில்லாமல் பேசும் அரசியல்வாதிகளை வளர்த்துவிட்டபிறகு, மக்கள் பணியாவது ஒண்ணாவது? போட்டியாளர்களுக்குப் பயந்து கூவத்தூரிலும் குடகிலும் பதுங்கு குழிகளை அமைத்துத் தங்கியிருக்கிறார்கள். 

அரசின், ஆட்சியாளர்களின் பலவீனத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, முழங்கமிடும் போராட்டங்கள். ஜாக்டோ ஜியோ, போக்குவரத்துத் தொழிலாளர்கள் என்று போராட்டங்களுக்கும் குறைவில்லை. இந்நிலையில், தலைமைச் செயலக வட்டாரங்களோ, வேறு விதமாக பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி ஓபிஎஸ் உள்ளிட்ட ’தர்மயுத்த’ எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கனவே பறி போய்விட்டது என, புதிதாக ஒரு மனு விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படவுள்ளதாகக் கூறுகிறார்கள். 

"ஒரு எம்.எல்.ஏ., கட்சிக் கொறடா உத்தரவை மீறிய உடனேயே தானாகவே தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். பதினைந்து தினங்களுக்குள் அதை உறுதிப்படுத்தவோ அல்லது மன்னிக்கவோ மட்டும்தான் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது. அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் தகுதி இழப்பு தானாகவே ஏற்பட்டு விடும்!" என்று பழைய வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதைக் குறிப்பிட்டுக் கூறி வருகிறார்கள் சிலர். இந்தப் புதிய திருப்பம், ஏற்கெனவே குழம்பிப் போயுள்ள தமிழக அரசியலில் இன்னும் எத்தனை குழப்பங்களை ஏற்படுத்துமோ?

விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் மக்கள், தங்கள் தவறுகளை உணர்ந்து, இனி வீதிக்கு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.