அதிமுகவுக்கு ஸ்டாலினும், டிடிவி.தினகரனும் தான் வில்லன்கள் அவர்கள் இடத்தில் கட்சியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் விளக்கும் வகையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். சுமார் 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. 

இந்த விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.பி.உதயகுமார் நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டி.டி.வி.தினகரன் என விமர்சித்துள்ளார். அவர்களிடம் கட்சியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஸ்டாலினை ஆள் பிடிக்காத வில்லன் என்றும், தினகரனை ஆள் பிடிக்கும் வில்லன் என்று கூறியுள்ளார். 

 வலைபோட்டு தேடுகிற வில்லன், சிக்கினால் யாரை வேண்டுமானாலும் அள்ளிக்கொண்டு செல்கிற வில்லன் அவர் தான் டிடிவி.தினகரன் என்று தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரிடமும் எச்சரிக்கையாக இருந்தால் தான் இந்த நாட்டையும், தேசத்தையும் மற்றும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.