திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரரின் நிறுவனம் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. அந்த ஒப்பந்ததாரருக்கு மட்டும்தான் கரூரில் டெண்டர் விடப்படுகிறது. 

கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் போடாத சாலைகளுக்கு பணம் எடுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளித்துள்ளார். 

கரூரில் ஊழல் புகார்

கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஊழல்கள் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். இந்த ஊழல் புகார் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தலைமைச் செயலாளரை சந்தித்து எம்.ஆர். பாஸ்கர் மனு அளித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரையும் சந்தித்து, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

சாலை போடாமல் பணம்

அப்போது அவர் கூறுகையில், “ கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக புகார் அளித்து வருகிறோம். இதுவரை 5 முறை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால், புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கரூரில் அவசர கதியில் தரமில்லாமல் சாலைகளை போட்டு வருகிறார்கள். போடாத சாலைக்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் வலியுறுத்தியும் பேசியுள்ளார். புகார் அளிக்கப்பட்ட சாலை பணியை நிறுத்தி விட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறோம். ஆனால், கலெக்டர் பிரபுசங்கர் நெடுஞ்சாலை துறையில் அதிகபட்ச நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்கிறார்.

ஆளுநரிடம் புகார்

திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரரின் நிறுவனம் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. அந்த ஒப்பந்ததாரருக்கு மட்டும்தான் கரூரில் டெண்டர் விடப்படுகிறது. இனியும் முறைகேடு தொடர்பாக யாரிடம் புகார் அளிப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை. விரைவில் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம். இந்த புகார் மீது நீதிமன்றத்தில் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.” என்று எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.