corporation mayor election amendment bill filed in assembly

மாநகராட்சி மேயர்களை இனிமேல் மக்களே நேரடியாக தேர்வு செய்ய ஏதுவாக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சி மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு, மாநகராட்சி மேயர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அதன்மூலம், மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்ய முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரை தேர்ந்தெடுப்பர்.

மேயரை மறைமுகமாக தேர்வு செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மேயர்களுக்கு கவுன்சிலர்கள் சரியாக ஒத்துழைப்பு நல்காததால் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் பிரச்னை நிலவுகிறது. எனவே மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையேயான நல்லுறவை உறுதிப்படுத்தும் வகையில், இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.

ஆனால், மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நாட்டில், மேயர் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவது என்பது மக்களாட்சிக்கு விரோதமானது என்ற குரல்களும் எழுந்தன.

இந்நிலையில், மாநகராட்சி மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை மீண்டும் கொண்டுவரும் பொருட்டு சட்டத்திருத்த மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.