தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீரென இன்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் ஆளுனர் மாளிகையில் இருந்து வெளியாகவில்லை. குறிப்பாக ஆளுநர் தொடர்பான எந்த தகவலாக இருந்தாலும் அதை பத்திரிகைச் செய்தியாக ஆளுநர் மாளிகை வெளியிடுவது வழக்கம். ஆனால் இதுவரை அதுபோன்ற எந்த செய்தி குறிப்பும் வெளியாகவில்லை. ஆனாலும் ஆளுநர் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, அதன் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது, இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 738 ஆக உயர்ந்துள்ளது. 4,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரான களத்தில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசியல்வாதிகள், வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக ஆளுநர்  மாளிகையிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது. சமீபத்தில் அங்கு பணிபுரிந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. அதில் கவர்னரின் உதவியாளர் தாமஸ்சும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.  இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட வழக்கமான மருத்துவ பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக தெரியவந்தது.  இருந்தபோதும் அவர் தன்னைத்தானே 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இதனை உறுதி செய்யும் வகையில் ஆளுநர் மாளிகையை அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  

இந்நிலையில் இன்று காலை 11.10  மணி அளவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி  மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் அட்மிட்டாகி இருக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தொடர்ந்து மூன்று நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது, தமிழகத்தில் ஏற்கனவே எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கவர்னர் மாளிகையில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதும்  ஆளுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ பத்திரிக்கை குறிப்பு வெளியானால் மட்டுமே, ஆளுனர் விவகாரம் குறித்த முழு விவரம் தெரியவரும்.