இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமாக அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 68 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 55 ஆயிரத்து 122  மாதிரிகள்  பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை சென்னையில் ஒரளவுக்கு  கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில்  மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

அதே நேரத்தில்  இந்த வைரஸ் தொற்றக்கு, முன்களப் பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், தேசிய அளவில் அமித்ஷா, எடியூரப்பா, ஆளுனர் பன்வாரி லால் புரோஹித் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள் பெருமளவில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். இதுவரை தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தில்  மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். இவர் சென்னை கட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், திருச்சியிலுள்ள சுந்தரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 80 வயது நிறைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வயது மூப்பு அடிப்படையில் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது குறித்தும் மருத்துவக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.