உலகையே உலுக்கி வரும் கொரோனா என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து மக்களை பாதுகாக்க இந்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசு ஒருபுறம் மின்னல் வேக வேலைகளை செய்துவரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் தனி ஒருவராய் களத்தில் நின்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கலக்கி வருகிறார்.

கரூர் சட்டமன்ற உறுப்பினரான இவர் கொரோனா ஊரடங்கு அறிவித்த முதல் நாளிலிருந்தே சிட்டுப் போலப் பறந்து வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டார். கரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மளிகை மற்றும் மருந்து பொருட்களை கடைகளில் வாங்கி இலவசமாக டோர் டெலிவரி செய்தனர்.

 இதனைத்தொடர்ந்து சுமார் 3 லட்சம் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து வகையான தரமான மளிகை சாமான்களை பைகளில் வைத்து வீடுகளுக்கு நேராக சென்று வழங்கியுள்ளார்.மளிகை சாமான்களை தொடர்ந்து தற்போது ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தேவையான தரமான காய்கறிகளை வழங்கும் பணியை தொடங்கியுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு பகுதிகளான பெரிய கூத்தூர், இந்திரா நகர், வையாபுரி நகர், காமராஜபுரம், பெரிய குளத்துப்பாளையம், பெரியார் சாலை, அண்ணா தெரு, திருப்பூர் குமரன் தெரு, வாங்க பாளையம், எம்.கே. நகர் என அனைத்து பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று மூன்றே மணி நேரத்தில் காய்கறிகள் நேரில் வழங்கப்பட்டன.

இதேபோன்றுதான் கரூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து காய்கறிகளை வழங்கும் பணியில் தனி ஒருவராய் களத்தில் இறங்கி கலக்கி வருகிறார். அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இந்த மளிகை சாமான் காய்கறிகள் வழங்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் தனது சொந்த செலவில் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.