சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரே தெருவைச் சேர்ந்த 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிரடி விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், ஐஸ்ஹவுஸ் வி.ஆர்.பிள்ளை தெருவில் மேலும் 19 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே தொடர்ந்து சென்னையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கலகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னையில் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வருவதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும்போது, ஒருவருக்கொருவர் 1 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். பணிக்குச் செல்லும்போதோ அல்லது அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வரும்போதோ கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்கள் கண்காணிக்கப்  பட்டு அவர்கள், 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள். அதோடு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் சென்னையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிச் செயல்படும் கடைகள் மற்றும் அலுவலகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த கடும் விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.