இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றன. அந்த வரிசையில் ஆங்காங் இந்திய நாட்டு விமானங்கள் தங்களது நாட்டில் தரையிறங்க தடைவிதித்துள்ளது. உலகம் முழுதும் கொரோனா வைரஸ் இரண்டாவது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. 

சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக, இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ஆங்காங் அரசு துண்டித்துக் கொண்டுள்ளது. இன்று முதல் அடுத்த 14 நாட்களுக்கு இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் ஆங்காங் தரை இறங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதேபோல பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் விமான போக்குவரத்தை அந்நாடு தடை செய்துள்ளது.

இந்த மாதம் இந்தியாவிலிருந்து விமானங்களில் ஹாங்காங் வந்த பயணிகளில் 50% பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டிற்கு வருவோர் தங்கள் பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை செய்து, பாதிப்பு இல்லை என உறுதி செய்த பின்னரே, தங்கள் நாட்டிற்குள் வர வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது. குறிப்பாக மும்பை- ஹாங்காங் வழித்தடத்தில் இயக்கப்படும் விஸ்தாரா விமானங்களை மே-2 ஆம் தேதி வரை ஆங்காங் அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.