சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் அரசு பிரதிநிதிகள் உள்பட பல்வேறு பிரபலங்களும் இந்த தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிரிக்கெட் வீரர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோர்களான பான் சிங், தாய் தேவகி தேவி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, கொரோனா உறுதியான தோனியின் பெற்றோருக்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவும் நாடித்துடிப்பின் அளவும் நிலையாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை விளையாட உள்ள நிலையில், தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.