கொரோனா தடுப்பு பணி விவகாரத்தில் விமர்சனம் செய்வதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்;- தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் கடுமையாகப் போராடி வருகிறோம். தற்போது 2000 புதிய செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

சென்னையில் தற்போது வட்டார மருத்துவமனைகளிலும் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் வட்டார மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது மாவட்டத்தில் 1000 தொற்றாளர்கள் வந்தாலும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை. வெளிப்படை தன்மையோடு தான் அரசு செயல்பட்டு வருகிறது. தவறான குற்றச்சாட்டுகளை யாரும் கூற வேண்டாம். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கேள்வி கேட்பது சுலபம், களத்தில் நின்று போராடும் போது தான் அதன் வலி தெரியும். கொரோனா பாதிக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி ஆரோக்கியமாக உள்ளார் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.