மதுரையில் நேற்று ஒரே நாளில் கொரோனா கொடூரத்திற்கு 7பேர் பலியான சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 7 பேர் திடீரென உயிரிழந்தனர். 

 14 வயது சிறுமி கொரோனா சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சிறுமி கடந்த 28-ந் தேதி கொரோனா அறிகுறியுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 30-ந் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் அங்குள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார்.இந்தநிலையில் இருந்த அவர் திடீரென உயிரிழந்தார். அந்த சிறுமிக்கு கொரோனா நோயின் தாக்கம் தீவிரமாக இருந்ததுடன், ரத்தசோகை நோயும் அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.நேற்று 5ஆண்கள் ஒரு பெண் ஒரு சிறுமி என 7பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நேற்றுடன் மதுரையில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது.

நேற்று 245பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். சிலர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கிறார்கள். மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,338 ஆக உயர்ந்துள்ளது. 2,975 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையை காட்டிலும் மதுரையை சுற்றி வளைத்து சூறாவளியாக கொரோனா தாக்கி வருகிறது. பொதுமக்களும் மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் இன்னும் தீவிரமாக செயல்பட்டால் மட்டுமே கொரோனா கொடூரத்தை தணிக்க முடியும்.