மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேமுதிகவை உருவாக்கிய பங்கு, விஜயகாந்த்தின் சிறுவயது நண்பரான சுந்தர்ராஜனுக்கும் உண்டு.  2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு மதுரை மத்திய தொகுதியில் எம்.எல்.ஏ.வானார் சுந்தர்ராஜன். சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கும் எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த்துக்கும் நடந்த வாக்குவாதத்துக்குப் பிறகு தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தனர். அதன்பிறகு அதிமுகவில் அவர்கள் ஐக்கியமானார்கள். அதில் ஒருவர் சுந்தர்ராஜன்.  

தேமுதிகவிலிருந்து அதிமுகவில் சேர்ந்த மாஃபா என்கிற பாண்டியராஜன், தற்போது அமைச்சராக இருக்கிறார். அதிமுகவில் ஐக்கியமான தேமுதிகவின் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் சிலர் வேறு கட்சிகளில் சேர்ந்துவிட்டனர். ஆனால், மதுரையின் முன்னாள் எம்.எல்.ஏவான சுந்தர்ராஜன் அதிமுகவிலேயே இருந்து வந்தார். வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில், மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான சுந்தர்ராஜனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் சுந்தர்ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது நெருங்கிய நண்பர் உயிரிழந்த சம்பவம் விஜயகாந்தை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.