அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அமமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அமமுக துணைப் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் டிடிவி தினகரன் தலைமையிலான அணிக்கு பொது சின்னம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி டிடிவி தினகரனின் அமமுகவுக்கு பொது சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 

இதையடுத்து வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் அனைவரும் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் குக்கர் சின்னத்தை பல சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே குக்கர் சின்னத்தால் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சத்யபிரதா சாஹூ, குக்கர் சின்னத்திற்கு சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் விண்ணப்பித்து உள்ளார்களா என்பதை பார்த்த பின்னர்தான் குக்கர் சின்னம் குறித்து முடிவு செய்யப்படும் எனக் கூறியிருந்தார்.  

இந்நிலையில் திருச்சி மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள சுயேச்சை வேட்பாளர் கணேசன் என்பவருக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இது அமமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.