அதிமுக கூட்டணியில் - தமாகாவுக்கு 1 தொகுதியை ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி பங்கீட்டு உடன்பாட்டில் இரு கட்சி நிர்வாகிகளும் கையெழுத்து போட்டுள்ளனர்.

 

அதிமுக கூட்டணியில் இணைய ஜி.கே.வாசன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் தமாகாவுக்கு 1 தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் உள்ள கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. 
 
அதிமுக கூட்டணியில் 3 மக்களவைத் தொகுதிகளுடன் 1 மாநிலங்களவை இடம் வேண்டும் என வாசன் கேட்டு வந்தார். ஆனால், ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே தர முடியும். அதிலும் வாசன் போட்டியிட வேண்டும் என அதிமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், 2 தொகுதிகளாவது வேண்டும் என வாசன் வலியுறுத்தி வந்த நிலையில்1 தொகுதியை மட்டுமே அதிமுக ஒதுக்கி உள்ளது. 

இந்த உடன்பாட்டின்போது அமைச்சர்கள் பி.தங்கமணி,எஸ்.பி.வேலுமணி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஸ் ஆகியோர் உடனிருந்தனர். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிக- 4  ஏ.சி.சண்முகம், என்.ஆர்.காங்கிரஸ், புதியதமிழகம் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தமாகாவுக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ள அதிமுக மீதமுள்ள 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.