Connection to the district authorities opies 15000 17 - Discharging Deepa tent
தீபா பேரவையில் இருந்த மாவட்ட உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஒ.பி.எஸ் வீட்டை தேடி படையெடுப்பதால் தீபாவின் கூடாரம் காலியாகி வருகிறது.
ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, சசிகலாதான் காரணம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பல குற்றசாட்டுக்களை முன்வைத்தார்.

மீடியாக்களில் பேட்டியெல்லாம் கொடுத்து வந்தார். பல்வேறு தரப்பட்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும், தெளிவாகவும் பதில் அளித்து வந்தார் தீபா.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக சசிகலாவும் முதலமைச்சராக ஒ.பி.எஸ்சும் பதவியேற்றனர். ஒ.பி.எஸ் பதவியை சசிகலா பறிக்க முயன்றதால் ஒ.பி.எஸ் சசிகலா தரப்பைவிட்டு வெளியே வந்தார்.
மேலும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார். இதனால் மக்கள் மனதில் நீண்ட நாட்களாக குமுறிகொண்டிருந்த சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.
இதன்மூலம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தார் ஒ.பி.எஸ்.
இதனிடையே ஒ.பி.எஸ்ஸுடன் இணைவார் என்று எதிர்பார்த்த தீபா தனியாக பேரவையை தொடங்கினார். அதற்கு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என பெயர் சூட்டி ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக நிற்பேன் எனவும் அறிவித்தார்.
ஆனால் கொஞ்சம் லேட்டாக அறிவித்ததால் தீபா தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டது. தொண்டர்களை முறையாக தீபாவுக்கு அனுசரிக்க தெரியவில்லை என்ற குற்றசாட்டும் எழுந்தது. தொடர்ந்து நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதிலும் தீபா பேரவையில் குழப்பம் நீடித்தது.
இதனால் தீபா பேரவையில் இருந்த பெரும்பாலான நிர்வாகிகள் ஒ.பி.எஸ் பக்கம் வரத்தொடங்கினர். இதனிடையே தீபா கணவர் மாதவன் புதுக்கட்சி தொடங்குவதாகவும் தீபா பேரவையில் இருந்து விலகுவதாகவும் புது பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தீபா என் கணவரை சசிகலா பிரிக்க பார்க்கிறார் எனவும், எதற்கும் நான் அஞ்சமாட்டேன் எனவும் கூறியிருந்தார்.
இதையடுத்து தீபாவை முதல்வராக்குவதற்காகவே தனிக்கட்சி தொடங்குகிறேன் என மாதவன் மாறி மாறி குழப்பி வந்தார்.
மொத்தத்தில் தீபா பேரவையே ஆழ்ந்த குழப்பத்தில் உள்ளது என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
இதன்விளைவாக தீபா கூடாரம் கும்பல் கும்பலாக காலியாகிறது. இந்நிலையில், தீபா பேரவை நிர்வாகிகள் 15 ஆயிரம் பேர் ஒ.பி.எஸ்ஸுடன் இணைகின்றனர்.
மேலும், 17 மாவட்ட உறுப்பினர்களும், 80 க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்களும் ஒ.பி.எஸ்க்கு கைகொடுக்கின்றனர். இதனால் தீபாவின் கூடாரம் மாவட்ட வாரியாகவும் காலியாகி வருவது உறுதியாகி உள்ளது.
