நாடாளுமன்றம் மக்களவையில் எம்.பி.க்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் 350 இடங்களைப் பிடித்து பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 52 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மக்களவையில் ஒரு கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டுமென்றால், அக்கட்சி 10 சதவீத இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதாவது, 54 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காத நிலை  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் பேசும்போது, “எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற 54 உறுப்பினர்கள் தேவை. ஆனால், மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு போதுமான எண்ணிக்கை இல்லை. எனவே எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கோரப்போவதில்லை. போதுமான உறுப்பினர்கள்  இல்லாததால் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் கோரியது. ஆனால், போதுமான எண்ணிக்கை இல்லை எனக்கூறி எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்க பாஜக மறுத்துவிட்டது. இந்நிலையில் இந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியே அறிவித்துவிட்டது.