நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அக்கட்சியில் தலைவர் ராகுல் காந்தி தெளிவாக அறிவித்துவிட்டார். தி.மு.க தலைவர் ஸ்டாலினும் கூட காங்கிரசுடனான கூட்டணி உறுதியாக உள்ளதாக தெரிவித்து வருகிறார். ஆனால் தொகுதிப் பங்கீட்டில் தான் இரண்டு கட்சிகள் இடையே பிரச்சனை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
   

அடுத்த ஆண்டு தான் தேர்தல் என்றாலும் கூட தி.மு.கவை பொறுத்தவரை தற்போதேகூட்டணி கட்சிகளுக்கான தொகுதியை இறுதி செய்துவிட்டு தேர்தல் பொறுப்பாளர்களை கூட அறிவித்துவிட்டது. அந்த வகையில் காங்கிரசுக்கு தமிழகத்தில் ஏழு தொகுதிகள் என்றும் புதுச்சேரி தொகுதியையும் வழங்குவது என்றும் முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது. இந்த தகவலை காங்கிரசுக்கு தெரிவித்து ஏழு தொகுதிகளின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

கடந்த 2009ம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டதை காங்கிரஸ் சுட்டிக்காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த முறை தமிழகத்தில் பத்து புதுச்சேரியில் ஒன்று என 11 தொகுதிகளை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் 2009 நிலை வேறு தற்போதைய நிலை வேறு என்று கூறும் தி.மு.க ஏழு தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்குவதே பெரியது என்று முனுமுனுத்து வருகிறது.
 

இந்த நிலையில் காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார் என்று டி.டி.வி தினகரன் வெளிப்படையாக அறிவித்து வருகிறார். தி.மு.க – அ.தி.மு.கவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. எனவே தி.மு.க கூட்டணியில் கொடுக்கும் தொகுதியை பெற்றுக் கொண்டு காங்கிரஸ் போட்டியிடப்போகிறதா? அல்லது புதிய கூட்டணியில் இணையப்போகிறதா என்கிற ஒரு கேள்வியும் சமீப காலங்களில் எழுந்து வருகிறது. இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
   

இந்த கூட்டத்தில் வைத்து தி.மு.க ஒதுக்க முன்வந்துள்ள தொகுதிகள் மற்றும் காங்கிரசுக்கு தமிழகத்தில் உள்ள மற்ற வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசப்பட உள்ளன. இந்த கூட்டத்திற்கு பிறகே காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எடுக்க உள்ள நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.