தி.மு.க. கூட்டணியை காங்கிரஸ் கைகழுவுமா? என்பதுதான் காவிரி மேலாண்மை விவகாரம், ஸ்டெர்லைட் பிரச்னை, அ.தி.மு.க. அரசு கலையும் எனும் வாதம், பதினெட்டு எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு ஆகிய எல்லாவற்றையும் தாண்டி எகிற ஆரம்பித்திருக்கிறது. 
அதாவது தமிழக காங்கிரஸ் கட்சி வரும் 7-ம் தேதியன்று தனது அவசர செயற்குழுவை கூட்டுகிறது. தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை பரபரவென சென்று கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸின் இந்த திடீர் செயற்குழு முக்கியமாய் கவனிக்கப்படுகிறது. எந்த விஷயத்தில் முடிவெடுக்க இந்த அவசர செயற்குழு? என்பதுதான் விவாதமே. 

ஆனால் டெல்லியிலிருந்து கசியும் தகவல்கள், தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதற்கான முதல் படியாக இந்த அவசர செயற்குழு அமையலாம்! என்கிறது. காரணம்? 2019-ல் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது, அதற்கு  முன்னதாக உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்க்கிறது தமிழகம். இது போதாதென்று எப்போது வேண்டுமானாலும் தமிழக அரசு கவிழ்ந்துவிடலாம் எனும் நிலையும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்து வரும் எந்த தேர்தல்களிலும் ‘காங்கிரஸுக்கு அதிக இடம் கொடுக்க வேண்டாம். போன சட்டசபை தேர்தலில் 41 இடங்களை ஒதுக்கினோம், ஆனால் வெறும் எட்டில்தான் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஒதுக்கிய இடத்தில் நாம் நின்றிருந்தாலும் கூட வென்று ஆட்சியை பிடித்திருப்போம். எனவே இனி வரும் தேர்தலிகளில் மிக மிக குறைவாகவே அவர்களுக்கு சீட் ஒதுக்குவோம். நாடாளுமன்ற தேர்தலில் வெறும் சிங்கிள் டிஜிட்டில் அவர்களுக்கு ஒதுக்கினால் போதும். அதுவும் நமது உதயசூரியன் சின்னத்தில் அவர்கள் போட்டியிட வேண்டும். ஜெயலலிதாவின் இந்த ஸ்டைல்தான் அறிவுப்பூர்வமானது.’ என்று ஸ்டாலினிடம் கழக சீனியர்கள் தூபம் போட்டுள்ளனர். 

ஸ்டாலினும் இதற்கு கிட்டத்தட்ட தலையசைத்துவிட்டார். தி.மு.க.வின் இந்த உள் முடிவு மெதுவாக கசிந்து காங்கிரஸின் டெல்லி மேலிடத்துக்கு போயிவிட்டது. தலைவர் ராகுலின் உத்தரவின் படியே அவசர செயற்குழுவை திருநாவுக்கரசர் கூட்டுகிறார். இதில் தலைமை நிர்வாகிகள் கூட்டணியை பற்றிப் பேச மாட்டார்கள், ஆனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்வாகிகள் தி.மு.க.வை இடித்துப் பேசி, கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்! என்று ஒரு பட்டாசை பற்ற வைப்பார்கள். 

இது நிச்சயம் அறிவாலயத்தில் பெரியளவில் வெடிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் தேசியகட்சியின் கூட்டணி இல்லாவிட்டால் வெற்றிக்கு சிக்கல் வரும் என்பதை ஸ்டாலின் அறிவார், இறங்கி வருவார்! என காங்கிரஸ் திட்டமிட்டு இந்த அவசர செயற்குழுவை கூட்டுகிறது! என்கிறார்கள். 

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு நெருக்கமான சிலரோ “தமிழகத்தில் அரசியல் சுழ்நிலை மிக உஷ்ணமாக இருக்கிறது. இந்நிலையில் தி.மு.க. போடும் ஆலோசனைகளிலும், போராட்டங்களிலும் ஏதோ ஒரு உதிரி கட்சி போல் கலந்து கொள்கிறோமே தவிர நமக்கென்று தனி கெத்து காண்பிப்பதேயில்லை. எனவே உடனடியாக நம் இயக்கத்துக்கென ஒரு தனி செயற்குழுவை நடத்தி, நமது பலத்தை காண்பிக்க வேண்டும்! என்று தலைவர் நினைக்கிறார். அதன் விளைவே இந்த செயற்குழு. இதன் மூலம் தி.மு.க.வுக்கு கூட்டணி குறித்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.” என்கிறார்கள். 
ப்பார்ர்றா!...