நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நெல்லை மாவட்ட கிழக்கு காங்கிரஸ் கமிட்டி நிறைவேற்றிய தீர்மானத்தால் பெரும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாரத வகையில் கடந்த வாரம் நாங்குநேரியில் நடைபெற்ற நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக ஒரு நகல் வெளியானது. அதில் நெல்லை நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் இருந்தது.

இதனை தொடர்ந்து நாங்குநேரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முடிவெடுத்துவிட்டதாகவும், இந்த விவகாரத்தில் திமுக தலைமையின் சம்மதம் பெறாமல் கே.எஸ்.அழகிரி தன்னிச்சையாக செயல்படுவதாகவும் பேச்சுகள் எழுந்தன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அழகிரி பட்டும் படாமல் பேசி விட்டுச் சென்றார். அதாவது தீர்மானத்தை ஆதரித்தும் பேசவில்லை, எதிர்த்தும் பேசவில்லை.

இதற்கு காரணம் அப்படி ஒரு தீர்மானத்தை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி இயற்றியுள்ளது அழகிரிக்கு நன்கு தெரியும் என்கிறார்கள். அதனால் தான் இந்த விவகாரத்தில் நழுவிச் செல்லும் டேக்டிக்ஸை அழகிரி கடைபிடித்துள்ளார். இதனை அறிந்து திமுக தரப்பு கடுப்பானதாக சொல்கிறார்கள். நம் கூட்டணியில் இருப்பதாக கூறிவிட்டு ஒரு தொகுதியில் தங்கள் வேட்பாளரை நிறுத்துவதாக எப்படி தீர்மானம் நிறைவேற்றலாம் என்று டென்சன் ஆனது திமுக தரப்பு.

இந்த நிலையில் தான் நாங்கள் அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவே இல்லை என்று சிறிதும் வெட்கம் இல்லாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரிடம் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. நாங்கள் திமுகவின் அடிமை தான் என்பதற்கு கட்டியம் கூறும் வகையில் அந்த அறிக்கை இருந்தது. இதில் பெரிய கொடுமை என்ன என்றால் அப்படி தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது நடவடிக்கை வேறு எடுக்கப்போகிறார்களாம்.

மாவட்ட தலைவர் என்கிற வகையில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கூட அதிகாரம் இல்லையா என்று பல நிர்வாகிகளும் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் மயூரா ஜெயக்குமார் தலையிட்டது ஏன், ஏதேனும் திமுக உள்ளடி வேலையா என்று விசாரணை நடைபெறுகிறதாம்.