மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து கடந்த மே 30ஆம் தேதியன்று ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்யக்கூடாது என்று மூத்த தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் வலியுறுத்தியும் அவர் தனது முடிவை கைவிடவில்லை. ராகுல் ராஜினாமா செய்தபின் புதிய தலைவரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

பிரியங்கா காந்தி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டுமென சில தலைவர்கள் ஊடகங்களில் விருப்பம் தெரிவிக்க, நேரு குடும்பத்தைச் சேராதவர்தான் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று ராகுல் காந்தி வலியுறுத்துவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

இந்த சூழலில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத், மீரா குமார், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி குழுவானது வடக்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு, தெற்கு என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்களில் உள்ள தலைவர்கள் தங்களுக்குள் தனித் தனியாக விவாதித்தனர்.

புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே அல்லது முகுல் வாஸ்னிக் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால் சோனியா காந்தியே காங்கிரஸ் தலைவராக மீண்டும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

அதே நேரத்தில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக மட்டும் தேர்தந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை  சோனியா காந்தி தலைராக பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி  ஏற்கனவே கடந்த 1998 முதல் 2017 வரை காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தார்.