திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என ராகுல்காந்தி கூறியுள்ளார். 

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ் சார்பாக இன்று நாகர்கோவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார். 

கடந்த முறை 2 பக்கமும் பெரிய தலைவர்கள் இருந்தனர். ஆனால் இப்போது மாநில அரசை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பிரதமர் மோடியின் திட்டங்கள் அனைத்தும் பணக்காரர்களுக்கானது. பிரதமர் மோடி 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார், ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கும், தமிழுக்கும் மோடியால் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. பணக்காரர்கள் வளர வேண்டும் என்று மோடி போராடுகிறார். ஏழைகளை மோடி மறந்துவிட்டார். 

மேலும் ரபேல் ஒப்பந்தத்தை எச்ஏஎல் நிறுவனத்திற்கு அளிக்க இருந்தோம். ஆனால் மோடி அதை அனில் அம்பானி நிறுவனத்திற்கு அளித்துவிட்டார். நாம் செய்ததை விட அதிக தொகையில் ஒப்பந்தம் செய்து இந்தியாவிற்கு இழப்பை ஏற்பட்டுவிட்டார் மோடி. மோடி ரபேல் ஒப்பந்தத்தில் தனியாக பேரம் நடத்தி உள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார். 

ராகுல் காந்தி தனது பேச்சில், மு.க ஸ்டாலின்தான் அடுத்த தமிழக முதல்வர். நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து இருக்கிறேன். அவரை சந்தித்து எனக்கு பெரிய மகிழ்ச்சி அளித்தது. கருணாநிதியிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். கருணாநிதி திமுகவை இப்போதும் வழி நடத்தி வருகிறார். அவர் நம்முடன்தான் வாழ்ந்து வருகிறார் என்று ராகுல் கூறினார். திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல, மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் கூட்டணி என்றார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம். மேலும் ஒரே வரி, எளிமையான வரி அமல்படுத்தப்படும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.