காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதற்கு பல்வேறுதரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், காஷ்மீர் நடவடிக்கை மோடி மற்றும் அமித்ஷாவின் ராஜதந்திரம் என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில், சுதந்திர தின விழா, கொண்டாடப்பட்டது. சேவாதளம் அணிவகுப்பு மரியாதையுடன், தேசியக் கொடியை, கே.எஸ்.அழகிரி ஏற்றினார்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஹசன் மவுலானா ஏற்பாட்டில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கேரள மக்களுக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவராண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய , அழகிரி , சுதந்திர போராட்டத்தில், ஒரு நாள் கூட, சிறைக்கு செல்லாதோர், செங்கோட்டையில் கொடி ஏற்றுகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிராக இருந்த, காஷ்மீர் மாநில தலைவர்களை, சிறையில் வைத்துள்ளனர்; இது, ஜனநாயகம் இல்லை என தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில், ராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, ரஜினி கூறுகிறார். காஷ்மீர் மக்களின் உரிமையை பறிப்பது தான், ராஜதந்திரமா என, அவரிடம் கேட்க விரும்புகிறேன் என அழகிரி தெரிவித்தார்.