பீகாரில் 70 தொகுதிகளை அடித்து பிடித்து வாங்கிய காங்கிரஸ் கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று கூட்டணியின் தோல்விக்குக் காரணமாகியிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் 41 தொகுதிகள் வாங்கி 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் அதிமுகவே வெற்றி பெற்றது. அந்தக் குறை இன்று திமுக தொண்டர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. தற்போது பீகாரிலும் அதே கதை நடந்தேறியிருக்கிறது. பீகாரில் தேர்தலுக்கு முன்பாக அதிக சீட்டுகளைப் பெறுவதில் காங்கிரஸ் கட்சி முரண்டு பிடித்தது. எதிர்பார்த்த சீட்டுகள் கிடைக்கவில்லையென்றால் தனித்து போட்டி என்றெல்லாம் மிரட்டி காங்கிரஸ் கட்சி கிலி ஏற்படுத்தியது.

நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 70 தொகுதிகளை ராஷ்டிரிய ஜனதாதளத்திடமிருந்து காங்கிரஸ் பெற்றது. ஆனால், இந்தத் தேர்தலில் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளை பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது. காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி காரணம் எனக் கூறப்படுகிறது. இக்கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் தோல்வியடைய இந்தக் கட்சியின் வாக்குப் பிரிப்பே காரணமாகியுள்ளது.

