அதிமுக அமைச்சர்களைப் போல் பொதுவாழ்க்கையில் தாழ்ந்தவர்கள் யாருமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டது தமிழகத்துக்கே தலைக்குனிவு என்று தமிழக அமைச்சரான ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார். இதேபோல தமிழக அமைச்சர்கள் பலரும் ப. சிதம்பரத்தை விமர்சித்தும் அவருடைய கைது நடவடிக்கையை வரவேற்றும் பேசிவருகிறார்கள். இ ந் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  “தமிழக அமைச்சர்களால் தமிழ் நாட்டுக்கே தலைக்குனிவு” என்று பதில் விமர்சனம் செய்தார்.

 
 “ப.சிதம்பரத்தின் மீது அழகாக இந்த வழக்கை அரசு ஜோடித்திருக்கிறது. ப. சிதம்பரத்தை கைது அமலாக்கத் துறை கைது செய்யாமல் இருக்க ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நீதியை வழங்கும் என்று நம்புகிறோம்.

 
ப. சிதம்பரம் கைதால் தமிழகத்துக்கு தலைகுனிவு என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்திருக்கிறார். தமிழகத்துக்கு யாரால் அவமானம், யாரால் தலைகுனிவு என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதிமுக அமைச்சர்களைப் போல் பொதுவாழ்க்கையில் தாழ்ந்தவர்கள் யாருமில்லை. தற்போது வரை பல்வேறு சிபி ஐ வழக்குகளுக்கும் ரெய்டுகளுக்கும் உட்பட்டு ஆட்சியில் அமைச்சர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.
ப.சிதம்பரம் இந்திய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி, தொழில் புரட்சிக்கு வித்திட்டவர். உலகில் சர்வாதிகாரிகளின் வரலாற்றைப் புரட்டி பார்க்கும்போது அடக்குமுறை என்பதே அவர்களுடைய அகராதியில் இருக்கும். ப. சிதம்பரத்தை எப்படியும் கைது செய்ய வேண்டும், அவரை 10 நாட்களாவது சிறையில் வைக்க வேண்டும் என்பதான் பாஜக அரசின் நோக்கம். அதற்காக பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.