காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை திஹார் சிறையில் வைத்துக்கொள்ளலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கிண்டலடித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தற்போதைய பொருளாதர பிரச்னை, ப. சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் வழக்கு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சுப்ரமணியன் சாமி கருத்து தெரிவித்தார். “தற்போது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. தற்போதைய பொருளாதார பிரச்னைக்கு காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம். மன்மோகன் சிங் காலத்திலும் பொருளாதார பிரச்னை இருந்தது. நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லிக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. நம் நாட்டில் இதுவரை பொருளாதார மேதைகள் நிதி அமைச்சர்களாக இருந்ததே இல்லை.

 
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தவிர ப.சிதம்பரம் மீது மேலும் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் சிறைக்கு போகப்போவது உறுதி. இதுபோல ராகுல், சோனியா மீதும் வழக்குகள் பாயும்.  காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை இனி திஹார் சிறையில் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

 
தற்போதைய சூழலில் நீர் மேலாண்மை திட்டங்களை நாட்டில் மேம்படுத்த வேண்டும். குறிப்பாக விவசாயிகள் ஏற்றுமதி செய்யும் சூழலை ஏற்படுத்த வேண்டும். விலை வாசி உயர்வைக் கட்ட்டுப்பத்த வேண்டும் என்றால் வரிகொள்கையில் மாற்றம் தேவை. இல்லாவிட்டால் விலைவாசி உயர்வை நிச்சயம் தடுக்க முடியாது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துவிடும். என்னைப் பொறுத்தவரை தமிழகத்தில் பாஜக எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். சில சீட்டுகளுக்காக தமிழகத்தில் பாஜக பிச்சை எடுக்கக்கூடாது. எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினால்தான் தமிழகத்தில் பாஜக வளாரும்” என்று சுப்ரமணியன் சாமி தெரிவித்தார்.