காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடல்நலன் குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விசாரித்தார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கும் அவருடைய மனைவிக்கும் கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து வசந்தகுமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் வசந்தகுமார் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால், அவர் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.


இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்துவருகிறார்கள். வசந்தகுமார் நலம் பெற வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வசந்தகுமார் குடும்பத்தினரை தொலைபேசியில் அழைத்து, உடல்நலன் குறித்து கேட்டறிந்தார். அதுதொடர்பாக ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

Scroll to load tweet…

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வசந்தகுமார் குடும்பத்தினரை தொலைபேசியில் அழைத்து வசந்தகுமாரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். இதுதொடர்பாக எல்.முருகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில். அவர்களின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தாரிடம் நலம் விசாரித்தேன்.” என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.