குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில், கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயக திருடர்கள் என்றும், அரசியலில் நேர்மையைப் பற்றி பேச மோடிக்கு அருகதை இல்லை என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றுள்ளார். 

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், பாஜக வேட்பாளர் ஒருவர் தோல்வியை சந்தித்திருப்பது பாஜகாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ, ஒருநாள் நீதி வெல்லும் என்று சொல்வதுபோல், நீதி வென்றது. ஒரு கட்டத்தில் தர்மம் வெல்லும் என்று சொல்வதுபோல் நிரூபிக்கப்பட்டுள்ளது. பாஜக, பல மாநிலங்களில் அத்துமீறி நுழைந்து அரசியல் செய்து வருகிறது என்று கூறியுள்ளார். மேலும்,

கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதன் மூலம் பாஜக கன்னத்தில் அறை வாங்கி உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்தது. 2 எம்.எல்.ஏ.க்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததை பாஜக தலைவர்களுக்கு காட்டியதால், அவர்களது வாக்குகள் செல்லாதவையாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.

கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜனநாயக திருடர்கள். அவர்களது வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இனி அரசியல் நேர்மையைப் பற்றி பேச மோடிக்கு அருகதை இல்லை. அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார். 

இவ்வாறு வைகோ கூறினார்.