சீன விவகாரத்தில் நம்முடைய பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு, 26 இன்ச் ஆக குறைந்துவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி. அகிலேஷ் பிரசாத் சிங் விமர்சித்துள்ளார்.
கடந்த வாரம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது சீனா ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் சீனா தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் தாக்குதல் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கை சீனா பகிரங்கமாக உரிமை கோரியது. இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் செயல்பாட்டை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துவருகிறது.


இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்துகள் தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடியை முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியுமான அகிலேஷ் பிரசாத் சிங் விமர்சித்து பேசியுள்ளார். செய்தி  தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரசாத் சிங், “சீன விவகாரத்தில் ராகுல் காந்தி கூறிய கருத்தில் தவறு ஏதும் இல்லை. நம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 பேரை சுடுவோம் என்று முன்பு கூறினோம். ஆனால், தற்போது 20 ராணுவ வீரர்கள் சீனாவுடன் நடந்த மோதலில் பலியாகி உள்ளனர். வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.
இந்த விஷயத்தில் நம்முடைய பிரதமர் மோடியின் 56 இன்ச் மார்பு, 26 இன்ச் ஆக குறைந்துவிட்டது. ஒரு புறம் நாம் தயார், தயார் என்று பிரதமர் கூறுகிறார். சீனா நம் ஒட்டுமொத்த தேசத்தையுமே காயப்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு ஆக்ரோஷமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.