தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் ஒட்டுமொத்தமாக 6-வது முறையாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நாடாளுமன்றம் அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் மட்டுமே வென்றது. இதில் காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 51 மட்டுமே. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க 55 உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி 51 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளதால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காது என்றே தெரிகிறது.


ஆளுங்கட்சி விரும்பினால் மட்டுமே இந்தப் பதவியை வழங்க முடியும். ஆனால், பாஜக விரும்பி காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை தருமா என்பது சந்தேகமே. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எதிர்பார்த்தது. ஆனால், பாஜக அந்தப் பதவியை வழங்க முன்வரவில்லை.
அதற்கு பாஜக 1984-ம் ஆண்டு தேர்தலை உதாரணமாக காட்டியது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 405 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 30 இடங்களைப் பிடித்த தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்தது. ஆனால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை காங்கிரஸ் தரவில்லை என்று பாஜக கூறியது. எனவே இந்த முறையும் இதே நிலை தொடர வாய்ப்புகள் உள்ளன.
அப்படி பார்த்தால், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித்  தலைவர் அந்தஸ்தை இழக்கிறது. 1952, 1957, 1962, 1984, 2014 ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த முறையும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நாடாளுமன்றம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.