இந்தப் பேச்சுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்ன அடிப்படை? எந்த ஊடகத்திலாவது ராகுல்காந்தி இப்படி பேசியதாக செய்தி வெளிவந்திருக்கிறதா? தமிழக முதல்வருக்கு சவால் விட்டு கேட்கிறேன். அதற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா?
காவிரியில் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட முடியுமா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் குடிநீர் பற்றாக்குறை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடகாவில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகத்தாது குறுக்கே அணை கட்டப்படும். காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்று பேசினார். இதுகுறித்து காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும்” என்று பேசினார்.
இந்நிலையில் ராகுல் பேசியதாக முதல்வர் எடப்பாடி குறிப்பிட்ட விஷயத்தை மறுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மேகதாதுவில் அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்று கர்நாடக தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்ததாகவும் அதை எதிர்த்து தமிழக காங்கிரஸார் ஏன் எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை என்றும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசி இருக்கிறார்.

