தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “குஷ்பு பாஜகவுக்கு சென்றதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவினர் வேல் யாத்திரை மட்டுமல்ல, இன்னும் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் மக்கள் பாஜகவை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என்ற பொதுவான கருத்து உள்ளது. அந்தக் கருத்து உண்மையெனில் அவர்களை விடுதலை செய்வதில் ஆட்சேபம் ஏதுமில்லை. எனினும் சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்றுக்கொள்வோம். மனுதர்மம் பற்றி திருமாவளவன் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. அது 100 சதவீதம் உண்மை. ஆனால், வேண்டுமென்றே சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
திமுகவுடன் காங்கிரஸ் வைத்துள்ள கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டுமல்ல. அது கொள்கை ரீதியிலான கூட்டணி. தேர்தலில் காங்கிரஸுக்கு குறைவான இடங்களே தருவார்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிதான்.” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.