கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.
கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கடும் பின்னடைவை சந்தித்தது. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் தலா ஓரிடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.  நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மே 29 அன்று உள்ளாட்சித் தேர்தல் கர்நாடகாவில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இத்தேர்தலில் ஆச்சரியப்படும் வகையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன.


மாறாக, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாஜக, பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. கர்நாடகாவில் உள்ள 61 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1300 வார்டுகளில் 509 வார்டுகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் 174 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. பாஜக 366 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  
நகராட்சிகளில் உள்ள 248 இடங்களில் 128 இடங்களில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கைப்பற்றியுள்ளது. பாஜக 56 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் - மதசார்ப்பற்ற ஜனதாதள கூட்டணியே கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.


நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகள் வந்திருப்பது கர்நாடக கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. “கர்நாடக மக்கள் காங்கிரஸ் பக்கம்தான் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாஜகவால், ஏன் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை” என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கேள்வி எழுப்பியுள்ளது.