திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிகளை அடையாளம் காண்பதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ராகுல் காந்தி இன்று தமிழகம் வர உள்ள நிலையில் தொகுதி பட்டியல் அறிவிப்பு வெளியாவது பற்றி உறுதியான தகவல்கள் இரு தரப்பிலிருந்தும் வெளியாகவில்லை.


திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி நீங்கலாக 9 தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக திமுகவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்திவந்தது. 
இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், அரக்கோணம், ஆரணி, திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும்  புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்க முடிவானது. ஆனால், சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருச்சி, அரக்கோணம் தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் ஸ்டானிடம் பிடிவாதமாகப் பேசினார்கள்.
இதனையடுத்து அரக்கோணம், திருச்சி ஆகிய தொகுதிகளை  காங்கிரஸ் கட்சியிடம் திமுக கேட்டது. ஆனால், இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களே தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள் என்றும் திருச்சியில் திருநாவுக்கரசர் போட்டியிடப் போவதாகவும் காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையத்து திமுக நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், ஏற்கனவே வழங்கிய பட்டியலில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்ய காங்கிரஸிடம் கேட்டுக்கொண்டார். அதை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டது. இதன்படி ஏற்கனவே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தேனி தொகுதியை காங்கிரஸ் விட்டுகொடுத்திருப்பதாகவும் அதற்கு பதில் சேலம் தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுக்கப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றத்தின்படி திருவள்ளூர், அரக்கோணம், ஆரணி, திருச்சி, சிவகங்கை, சேலம், விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு என முடிவாகியிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியல் மேலிடத்துக்கு தமிழக காங்கிரஸ் அனுப்பி வைத்து நேற்று இரவு 9 வரை காத்திருந்தது. மேலிடத்திலிருந்து அனுமதி கிடைத்தவுடன் திமுகவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் முடிவு செய்திருந்தார்கள். ஆனால். 9 மணியைத் தாண்டியும் மேலிடத்திலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை.
இதனால், திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் அறிவிப்பு வெளியாவது தள்ளிப்போனது. இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தமிழகம் வர உள்ளார். சென்னைக்கு வந்து சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு பிறகு கன்னியாகுமரி செல்கிறார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். ராகுல் காந்தி வருவதற்கு முன்பாக தொகுதி பட்டியல்களை வெளியிட திமுக முடிவு செய்திருக்கிறது.
என்றாலும் அது சாத்தியாமா என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் ராகுல் வருகையிலும் அவரது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் இன்று பிஸியாக இருப்பார்கள். எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவர்கள் வருவார்களா என்பதிலும் சந்தேகம் நிலவுகிறது. ஒரு வேளை இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு என்பதே கடைசி கட்ட தகவல்.