நாடாளுமன்றத் தேர்தலுக்காக தொகுதி உடன்பாடு கண்ட கட்சிகள் எல்லாம் விருப்ப மனு வாங்கி வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் மூழ்கியிருக்கும் நிலையில், தேசிய கட்சியான காங்கிரஸ், விருப்ப மனுவை வாங்குவது பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.


திமுக கூட்டணியில் முதல் கட்சியாக புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி பெற்றது. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து திமுகவுடன் காங்கிரஸ் தரப்பு ஆலோசனை நடத்திவருகிறது. இன்னொரு புறம் தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு கோஷ்டி தலைவர்களும் முட்டி மோதி வருகிறார்கள். இதற்காக கோஷ்டி தலைவர்களைப் பிடித்து டெல்லியிலும் முகாமிட்டு வருகிறார்கள் காங்கிரஸ்காரர்கள். 10  தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி விருப்ப மனுவை ஏன் பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், கோஷ்டி பூசல் ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே காங்கிரஸ் தரப்பில் விருப்ப மனுக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

 
இது குறித்து அக்கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, “ பிற  கட்சிகள் போல விருப்ப மனு தாக்கல் பண்ண கேட்டுக்கொள்ளலாம் என காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், ஏற்கனவே 9  தொகுதிகளுக்கு போட்டியிட கோஷ்டி தலைவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் மல்லு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் இங்கே விருப்ப மனு வாங்கினால், அதிலிருந்து ஃபில்டர் செய்து காங்கிரஸ் மேலிடம் பட்டியல் கேட்கும். 
அப்படி ஒரு நிலை வந்தால், கோஷ்டி பூசல் பெரிதாக வெளிப்படும். எனவே சீட்டுக்கு ஆசைப்படுவோர், நேரடியாக டெல்லி மேலிடத்தை அணுகி வாங்கிக்கொள்ளுங்கள் என்று என்று சொல்லி விடலாம் என்று நிர்வாகி தரப்பில் முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் காங்கிரஸ் தரப்பில் விருப்ப மனு பெறுவது பெரும்பாலும் இருக்காது” என்கின்றன.