தனது ரசிகர் மன்றத்தின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த ரஜினி ஏறக்குறைய முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்று ரஜினி ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே தெரியவரும் என்று அவரது சகோதரர் சத்யநாராயணா கூறியிருந்தார். இவற்றையெல்லாம் வைத்து ரஜினி விரைவில் அரசியல் பிரவேசத்தை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரத்திலேயே ரஜினி தனது அரசியல் ஆலோசகர்களாக கருதும் பலரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்துள்ளார். மேலும் ரஜினி ரசிகர் மன்றத்தின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜூ மகாலிங்கத்தையும் வீட்டிற்கு அழைத்து பேசினார். ஏற்கனவே ரஜினி ரசிகர் மன்ற பணிகளில் மகாலிங்கம் தீவிரமாக இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவரை மற்ற பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்குமாறு கூறி விட்டார். தற்போது அவரை மீண்டும் அழைத்துப் பேசி இருப்பது ரசிகர் மன்றத்தின் முதல் மாநாடு நடத்துவது தொடர்பாக என்று கூறுகிறார்கள்.

தர்பார் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய ரஜினி தமிழருவி மணியன், கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், தனது நீண்ட கால நண்பரும் தொழிலதிபருமான ஏசி சண்முகம் என பலரையும் அழைத்து அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார். மேலும் ரசிகர் மன்றத்தின் முதல் மாநாடு எந்த ஊரில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினியின் இந்த பேச்சு சென்றுள்ளது. அப்போது பலரும் கூறியுள்ள நகரம் தான் திருச்சி.

 

தமிழகத்தின் மத்திய பகுதியிலுள்ள ஒரு ஊராக திருச்சி கருதப்படுகிறது. தமிழகத்தின் எந்த ஒரு மூலையில் இருந்தும் திருச்சிக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து வசதி உண்டு. எனவே அந்த மாநாட்டை கூட்டினார் ரசிகர்கள் மற்றும் மக்கள் பிரச்சனையின்றி வந்து செல்ல முடியும் என்று பலரும் ஆலோசனை கூறியுள்ளனர். இதற்கிடையே ரஜினியின் பெற்றோருக்கு திருச்சி ரசிகர்கள் மணிமண்டபம் கட்டி உள்ளனர். இதுபோன்ற சென்டிமென்ட் காரணங்களால் திருச்சியில் மாநாடு நடத்த ரஜினி முடிவெடுத்து விட்டதாகவும் விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.