குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர்களை களம் இறக்குவது என்று டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.

கட்சி துவங்கிய வேகத்தில் மாவட்டம் மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து கிளைக்கழகம் வரை துவக்கி வேகம் காட்டியவர் தினகரன். செல்லும் இடம் எல்லாம் கூட்டம் கூடியதால் நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் கட்சி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக படுதோல்வி அடைந்தது. போதாக்குறைக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளிலும் அமமுக வேட்பாளர்கள் மண்ணைக் கவ்வினர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட கிடைக்காத பரிதாப நிலை ஏற்பட்டது.

பெரும்பாலான தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நிலையில் கட்சி ஆரம்பித்தும் நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த காரணத்தினால் தினகரன் அதிர்ந்து போனார். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்குள் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தந்த பாடத்தால் அந்த தொகுதிகளில் போட்டியிடாமல் ஒதுங்கினார் தினகரன்.

அதே சமயம் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்கினார் தினகரன். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் கூட அமமுக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். இதனால் இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெற்ற தினகரன் தற்போது சட்டப்பேரவை தேர்தலை மையமாக வைத்து திட்டம் தீட்ட ஆரம்பித்துள்ளார். தனித்து போட்டியிட்டால் வேலைக்கு ஆகாது என்பதை தினகரன் உணர்ந்து வைத்துள்ளார். அதே சமயம் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் தனது கட்சியின் வாக்கு வங்கி சதவீதத்தை நிரூபிக்க வேண்டும்.

இந்த வாக்குவங்கியை நிரூபிக்க ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஓரளவிற்கு உதவிய நிலையில் கட்சிகள் எதுவும் தினகரனை கண்டுகொள்ளவில்லை. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தினகரன் ரகசியமாக மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் தான் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகள் காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே அடுத்த ஆறு மாதத்திற்குள் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரித்து தனது வாக்கு வங்கியை நிரூபித்தால் சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து எதிர்கால அரசியலுக்கு அடித்தளம் அமைக்க முடியும் என்று தினகரன் முடிவெடுத்துள்ளார். இதற்கிடையே கட்சியில் இருந்து நிர்வாகிகள் வேறு வேறு கட்சிகளுக்கு ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலும் கூட இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வலுவான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தினகரன் துவக்கிவிட்டதாக சொல்கிறார்கள். வேட்பாளர்கள் செலவு செய்யும் அதே அளவிலான தொகையை கையில் இருந்து செலவழித்தாவது வாக்குவங்கியை நிருபிக்க தினகரன் தயாராகிவிட்டாராம்.