Asianet News TamilAsianet News Tamil

கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமியை குறிவைத்த கம்யூனிஸ்டுகள்..!! அரசுக்கு கொடுத்த நெருக்கடி..!!

25 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை என்பது ஏற்கும் படியாக இருந்தாலும்கூட கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது

communist party demand government to appeal against udunalai shakar verdict
Author
Chennai, First Published Jun 22, 2020, 5:55 PM IST

உடுமலை சங்கர் சாதி ஆணவப்படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது எனவும் அதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா ஆகியோரின் சாதி மறுப்பு திருமணத்தை ஏற்க முடியாத சாதிவெறி சக்திகள் சங்கரை கொலைசெய்தனர். 2016 மார்ச் 13 அன்று பட்டப்பகலில், பலர் முன்னிலையில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரில் சங்கர் கொடூரமான முறையில் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். சங்கர் கொல்லப்படுவதை தடுக்க முயன்ற கௌசல்யாவையும் கொலையாளிகள் வெட்டி வீழ்த்தினார்கள். மிகத்தீவிரமான சிகிச்சைக்கு பிறகே கௌசல்யா உயிர் பிழைத்தார். தமிழகம் மட்டுமல்ல,  உலகமே அதிர்ச்சி அடைந்த மிகக் கொடூரமான சாதி ஆணவப்படுகொலை சங்கர் படுகொலையாகும். 

communist party demand government to appeal against udunalai shakar verdict

இவ்வழக்கில்  2017 டிசம்பர் 6 அன்று திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கௌசல்யாவின் தகப்பனார் சின்னச்சாமி மற்றும் கூலிப்படையினர் ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல்(எ) மதன் உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய 3 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதன் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் கீழ் கோர்ட்டில் 3 பேர் விடுவிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மீதம் இருக்கிற ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை குறைக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள்தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை என்பது ஏற்கும் படியாக இருந்தாலும்கூட கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

communist party demand government to appeal against udunalai shakar verdict

இந்த கொலை வழக்கில் கொலைக்கான பிரதானமாக காரணமே சாதிவெறி தான். கூலிப்படையினரை ஏவியது கௌசல்யா குடும்பத்தினர் தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. காரணம் கூலி படையினருக்கும் சங்கருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
 இவ்வாறான சூழ்நிலையில் இந்த வழக்கிலிருந்து சின்னசாமி விடுவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் மேலும் சாதி ஆணவக் கொலைகள் நடைபெறுவதை ஊக்கப்படுத்திடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்களின் செயல்பாடு குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் அரசு தன்னுடைய பொறுப்பை  தட்டிக் கழிக்கக்கூடாது. இந்த தீர்ப்பின் மீது தமிழக அரசு உடனடியாக  மேல்முறையீடு செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.என அதில் கூறப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios