திமுகவினருக்கு கொட்டும் கமிஷன்! ரூட் போட்டு கொடுக்கும் அ.தி.மு.க.... மிரட்டி விரட்டிய ஸ்டாலின்!
அறிவாலயத்தில் கடந்த இரண்டு நாட்களாய் ஒரு பரபரப்பு. அது...ஆளும் தரப்பில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்! என்பதுதான். அப்படி என்ன பேசுகிறார்கள் என்பதையும் ஸ்டாலின் ஸ்மெல் செய்துவிட்டாராம்.
அறிவாலயத்தில் கடந்த இரண்டு நாட்களாய் ஒரு பரபரப்பு. அது...ஆளும் தரப்பில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்! என்பதுதான். அப்படி என்ன பேசுகிறார்கள் என்பதையும் ஸ்டாலின் ஸ்மெல் செய்துவிட்டாராம். இதைத் தொடர்ந்து அவர் சில கட்டளைகளை பிறப்பிக்க, பரபரப்பு பற்றிக் கொண்டதாம் அறிவாலயத்தில். சரி, ஆளுங்கட்சி ஏன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேச வேண்டும்? சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறதா என்ன? என்று கேட்பவர்கள் தொடர்ந்து வாசியுங்கள்.
அது என்னமோ தெரியவில்லை, என்ன மாயமோ தெரியவில்லை சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது உயர்கல்வி, சுகாதாரம், பொதுப்பணி உள்ளிட்ட துறைகளில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வைத்த கோரிக்கைகள் பல சப்தமில்லாமல் நிறைவேற்றப்பட்டு வருகிறதாம். அதிலும் தி.மு.க.வின் வி.ஐ.பி. எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நடந்திருக்கிறதாம், நடக்கிறதாம், நடப்பதற்கு ஆயத்த உத்தரவுகளும் போடப்பட்டுள்ளதாம்.
இந்த முன்னுரிமை எந்தளவுக்கு என்றால், சில இடங்களில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ,க்களே அதிகாரிகளிடம் ‘ஹலோ, நடக்குறது எங்க ஆட்சியா இல்லா தி.மு.க. ஆட்சியா, அதென்ன எதிர்கட்சி எம்.எல்.ஏ. தொகுதிக்கு இப்படி பணிகள் ஒதுக்கீடு ஆகுது?’ என்று டென்ஷனாகுமளவுக்கு இருக்கிறது. இதற்கு அதிகாரிகளிடமிருந்து வரும் ஒரே பதில் ‘தலைமை செயலக உத்தரவு இது! நம்பலைன்னா நீங்க அங்கேயே கேளுங்க.’ என்பதுதான். ஆக இப்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வைத்த கோரிக்கைகளில் கணிசமானவை நிறைவேற்றப்பட்டுள்ளதை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கே ஆளும் தரப்பிலிருந்து போன் மூலமாகவும், தூதுவர் மூலமாக நேரிலும் சென்று விளக்கப்படுகிறது ரகசியமாக. தி.மு.க.வின் வி.ஐ.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு போனில் தகவல் தருபவர்கள், அக்கட்சியின் புதுமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றுக் வசதி குறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு நேரிலேயே சென்று விளக்குகிறார்களாம்.
ஸ்டாலினுக்கு இது கோபத்தை தருமென்றாலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உள்ளூர மகிழ்ச்சியே. காரணம், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கான பணம் கைமாறியது, மாறிக் கொண்டும் இருக்கிறது என்று வலுவான பேச்சு இருக்கும் நிலையில் இவர்களோ காய்ந்து கிடந்தார்கள். அடுத்தடுத்து கட்சிக்கான செலவு, தேர்தல் செலவு என வரும் நிலையில் எதிர்கட்சியிலிருந்தபடி என்ன செய்ய முடியும், எப்படி சம்பாதிப்பது? என்று ஏங்கிக் கிடந்தவர்களுக்கு ஆளுங்கட்சியே தரும் இந்த வாய்ப்பு பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
சாலைப்பணி, கட்டிட பணி என்று எது நடந்தாலும் சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு தானாக வந்து சேரும் கமிஷன் கணிசமான தொகையாச்சே! அதுதான் எம்.எல்.ஏ.க்களின் குஷிக்கு காரணம். ஆக ஆளுங்கட்சி தன் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு இப்படி சோப்பு போட்டு வருவதும், அதற்கு இவர்கள் வாகாக முதுகு கொடுப்பதும் ஸ்டாலினை டென்ஷனுக்கு மேல் டென்ஷனாக்கி இருக்கிறது. இதனால் ஒரு வாய்மொழி உத்தரவை போட்டிருப்பவர், ‘உங்கள் தொகுதியில் மக்கள் பணி நடப்பதை வரவேற்பதில் தவறில்லை.
ஆனால் அதற்காக அரசை கொண்டாட வேண்டியதோ, அல்லது அவர்களிடம் கும்பிடு போட வேண்டியதோ தேவையில்லை. கழக ஆட்சியிலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கேட்டதையெல்லாம் செய்து கொடுத்திருக்கிறோம் நியாயமாக. அதற்காக அவர்கள் தங்களின் கட்சிக்கு எந்த அநியாயத்தையும் செய்துவிடவில்லை. நடக்கும் அரசு பணிகள் எல்லாம் மக்களின் வரிப்பணத்தில் நடப்பதே ஒழிய ஆளும் நபரின் சொந்தப்பணமில்லை. எனவே யாரையும் கொண்டாட வேண்டிய தேவையில்லை. கவனம்.’ என்று மிரட்டலாய் விழியை உருட்டியிருக்கிறாராம். ஆனாலும் தானாக சேரும் கமிஷனால் கலகலப்பாய் இருக்கிறது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தரப்பு.