ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கருணாஸ் அதிமுக தலைமையுடன் நெருக்கமானார். வழக்கமாக டிடிவி தினகரனை வைத்து பசும்பொன்னில் விழா எடுக்கும் கருணாஸ் இந்த முறை எடப்பாடி பழனிசாமியை வைத்து எடுத்தார். இதனால் அவர் சசிகலா ஆதரவாளர் எனும் தன் மீதான முத்திரையை அகற்றிவிட்டதாக பேச்சுகள் எழுந்தன.

ஆனால் புதுக்கோட்டையில் பேசிய கருணாஸ் தற்போதும் தான் சசிகலா ஆதரவாளர் தான் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசியலில் மாற்றம் ஒன்று தான் மாறாதது. அதைப்போல் சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு மாற்றங்கள் வரலாம் என்று கூறியுள்ளார். அதோடு தனது சமூக மக்களின் நன்மைக்காகவே அதிமுகவுடன் தற்போது நெருக்கமாக இருப்பதாகவும் கருணாஸ் கூறியுள்ளார்.

சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு அவருடன் இணைந்து செயல்படுவது குறித்து முடிவெடுப்பேன் என்றும், அப்போது அதிமுகவிற்குள் மாற்றம் வருமா என்றால் தனக்கு தெரியாது என்றும் அதே சமயம் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்றும் கருணாஸ் கூறியுள்ளார். மேலும் எடப்பாடியை வைத்து விழா எடுத்ததால் டிடிவி, கருணாஸ் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் சசிகலாவை இனி கருணாசால் சந்திக்க முடியாது என்றும் பேச்சுகள் எழுந்தன.

ஆனால் சசிகலாவை சிறையில் இருந்து வந்த பிறகு தான் சென்று பார்ப்பேன் என்றும், தற்போது சிறைக்கே சென்று கூட பார்ப்பேன் என்றும் யாரும் தன்னை தடுக்க முடியாது என்றும் கருணாஸ் கூறியுள்ளார். திடீரென சசிகலாவை முன்னிலைப்படுத்தி கருணாஸ் ஆரம்பித்துள்ள அரசியல் ஆட்டம் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.