ஜல்லிக்கட்டு நடத்த மறுத்தால், மிகப் பெரிய போராட்டத்தை தி.மு.க. நிச்சயம் நடத்தும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
கேள்வி:- முதல் வங்கிகளில் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது, பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும். இப்படி தினம் தினம் மத்திய அரசு வெளியிடும் அறிவிப்புகளால் பொதுமக்கள் எவ்வாறு சிரமத்திற்கு ஆளாகிறார்கள்?
பதில்:- ஒரே வரியில் சொல்வதென்றால், இந்த திட்டத்தை அறிவித்த பிறகு, மத்திய அரசு தொடர்ந்து ஏதோ சலுகைகள் தருவது போல சில அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே போகிறது. அதனால் தான், மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு அழகான வார்த்தையில் சொல்லியிருக்கிறார். மத்திய அரசின் நிர்வாகம் ஒரு பெரிய தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார். அதுதான் உண்மை.

கேள்வி:- கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10க்கு மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளார்கள். ஆனால், மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இதை பற்றி?
பதில்:- தொடக்கத்தில் இருந்து இதைத்தான் சொல்லி வருகிறேன். ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு செயல்பட முடியாத நிலையில், நிர்வாக ரீதியாக முடங்கிவிட்டது. அதுதான் உண்மை. அதனால்தான் இப்போது விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் அவலம் உருவாகி இருக்கிறது. அப்படி இறந்த விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லும் வகையில் தான் எனது இந்த பயணம் அமைந்திருக்கிறது.
கேள்வி:- ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரையில் வரவில்லை. அப்படி வரவில்லை என்றால், அதற்காக தி.மு.க., போராட்டம் நடத்தப்படுமா?.
பதில்:- ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு வரவில்லை என்பது குறித்து ஊடகங்கள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடமும், அதேபோல இந்த ஆண்டு நிச்சயமாக ஜல்லிக்கட்டை கொண்டு வருவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடமும்தான் கேட்க வேண்டும். நிச்சயமாக, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழ்நிலையை மத்திய அரசும், மாநில அரசும் உருவாக்காவிட்டால், உறுதியாக தலைவர் கருணாநிதியின் அனுமதியோடு, தி.மு.க. சார்பில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நாங்கள் நிச்சயம் நடத்துவோம்.
கேள்வி:- முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதற்கு பிரதமர் பதிலளிக்காமல் சென்றுவிட்டாரே..?
பதில்:- முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை பிரதமர் மோடி அலட்சியப்படுத்தி இருப்பது, பிரதமர் மக்களை எந்த அளவிற்கு புறக்கணிக்கிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
