தமிழகத்தில் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவுவெடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் தமிழகம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேர்வுகள் ரத்து  செய்யப்பட்டது. அதேபோல், புதுச்சேரியில் 10ம் வகுப்பு தேர்வு மற்றும் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்லூரி தேர்வுகளை ரத்து செய்யும் கோரிக்கையை மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்;- கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும், நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தவும், பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அர்ப்பணிப்பு உணர்வோடு, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். எனவே, இப்போது தேர்வை நடத்துவதற்கு சாத்தியக்கூறு இல்லை என்று தெரிவித்தார். 

மேலும், ஒவ்வொரு மாணவரின் கல்வித் தரத்தை பிரித்து பார்ப்பதற்கான சாத்தியக்கூறு தேர்வைத் தவிர வேறு கிடையாது. கல்லூரி மதிப்பெண் என்பது எதிர்காலத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, தேர்வு ரத்து குறித்து, முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளார். கொரோனா பரவல் காலகட்டத்தில் தேர்வை நடத்தும் பட்சத்தில் பெரும் ஆபத்தில் போய் முடியும். ஆகையால்,  கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.