Coimbatore marxist communist party office under attack
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசியிருந்தார்.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் டெல்லி சென்ற அவர், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் என்ற போர்வையில் உள்ளே நுழைந்த இருவர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
.jpeg)
இதன் எதிரொலியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. பா.ஜ.க. அலுவலகம் தாக்குதலுக்கு உள்ளான தகவல் வெளியானதுமே கேரளா முழுவதும் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டு பா.ஜ.க.தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

இந்தச் சூழலில் கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. காந்திபுரம் பேருந்துநிலையம் அருகே உள்ள அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அசாதாரணமான சூழல் நிலவி வருவதால், பதற்றம் மிகுந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
