Co-operative banks operate in parallel with private banks - Minister Seloor Raju

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகளுக்கு இணையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழை பொய்த்து போனதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடு வருகிறது. அருகில் உள்ள மாநிலங்களும் தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. இதனால், தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து விவசாயிகளின் வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம், டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். மேலும், அவர்களும் போராட்ட களத்தில் குதித்தனர்.
இதற்கிடையில், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அய்யாகண்ணு தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் கடந்த வாரம் மீண்டும் தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். அதன்படி போராட்டம் நடந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்ட தொடரில் விவசாயிகளுக்கான நலன் குறித்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால், அந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், அனைத்து கூட்டுறவு வங்கிகளும் தனியார் வங்கிகளுக்கு இணையாக செயல்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
அதேபோல் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களுக்கான பணியில் சுணக்கம் இருக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.